குணச்சித்திர நடிப்பால் இதயங்களை வென்ற நானா படேகர்
இந்தியத் திரையுலகில் குணச்சித்திர நடிப்புக்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்த மூத்த இந்திய நடிகர் நானா படேகர் கடந்த 08ஆம் திகதி காலமானார். அவர் இறக்கும்போது 75 வயதாக இருந்தார்.
பிரபலமான பிரதான திரைப்படங்களின் மூலம் புகழ் பெற்றதோடு மட்டுமல்லாமல், ஒரு கதாபாத்திரத்தின் உள்ளார்ந்த உணர்வுகளைப் பார்வையாளர்கள் உணரும் வகையில் வெளிப்படுத்தும் திறமையினாலும் இந்தியத் திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர் அவர். நடிகராக மட்டுமன்றி, இயக்குநர், எழுத்தாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் எனப் பல்வேறு துறைகளிலும் அவர் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.
1951ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி மகாராஷ்டிர மாநிலத்தின் முருட்-ஜஞ்சிரா பகுதியில் பிறந்த நானா படேகரின் இயற்பெயர் விஸ்வநாத் படேகர் என்பதாகும். சிறுவயது முதலே கலைத்துறையில் ஆர்வம் கொண்டிருந்த அவர், பின்னாளில் நடிப்புக் கலையைத் தனது வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாற்றிக்கொண்டார்.
திரைப்படத்துறையில் நுழைவதற்கு முன்னர் மேடை நாடகங்களின் மூலம் தனது நடிப்புப் பயிற்சியையும் அனுபவத்தையும் வளர்த்துக்கொண்டார். மேடை நாடகங்களில் பெற்ற அனுபவம், அவரது நடிப்பில் இயல்புத்தன்மையையும் வலிமையையும் வளர்த்தெடுப்பதற்கான அடித்தளமாக அமைந்தது.
1970களில் திரைப்படத்துறையில் அறிமுகமான நானா படேகர், ஆரம்பகாலத்தில் கதாநாயகப் பாத்திரங்களை விடப் பல்வேறு தன்மைகளைக் கொண்ட சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கே அதிக முக்கியத்துவம் அளித்தார். அவரது நடிப்பின் தனிச்சிறப்பு, மிகைப்படுத்தலின்றி கதாபாத்திரத்தின் உணர்வுகளைப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதாகும். கோபம், வேதனை, அன்பு, பயம் மற்றும் ஆதரவற்ற நிலை போன்ற மனித உணர்வுகளை மிகவும் வலிமையாக வெளிப்படுத்தும் ஆற்றல் அவரிடம் காணப்பட்டது.
1980களில் அவரது நடிப்புப் பாணி இந்தியத் திரையுலகில் அதிக கவனத்தைப் பெற்றது. குறிப்பாக, சமூக மற்றும் அரசியல் பின்னணியைக் கொண்ட திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தின.
மராத்தித் திரைப்படங்களிலும் தனது பங்களிப்பை வழங்கிய அவர், இந்தி திரைப்படமான சலாம் பாம்பே (Salaam Bombay!) திரைப்படத்தில் நடித்ததற்காக 1988ஆம் ஆண்டு ஒஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். இந்தத் திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
நானா படேகரின் திரைப்பயணத்தில் மற்றுமொரு முக்கிய அம்சமாக விளங்குவது, சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட கதாபாத்திரங்களில் அவர் வெளிப்படுத்திய திறமையாகும். வறுமை, ஊழல், வன்முறை, போர் மற்றும் சமூக அநீதி போன்ற விடயங்களை உள்ளடக்கிய படைப்புகளில் அவர் மிகவும் வலுவான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். இதன் காரணமாக, அவர் ஒரு பிரபலமான நடிகராக மட்டுமன்றி, ஆழமான சமூகப் பிரச்சினைகளைத் திரைப்படங்களின் ஊடாகப் பேசும் கலைஞராகவும் அங்கீகரிக்கப்பட்டார்.
கிராந்திவீர் (Krantiveer) திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம், அவரது நடிப்பு வாழ்க்கையின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க தருணமாகும். சமூகத்தில் நிலவும் அநீதிகளுக்கு எதிராகப் போராடும் ஒருவரின் கோபத்தையும் உள்ளார்ந்த வேதனையையும் அந்தக் கதாபாத்திரத்தின் மூலம் வலிமையாக வெளிப்படுத்த அவர் வெற்றி பெற்றார்.
அவரது புகழை மேலும் விரிவுபடுத்திய மற்றுமொரு திரைப்படம் வெல்கம் (Welcome) ஆகும். இதில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் அவர் பார்வையாளர்களைச் சந்தித்ததே இதற்குக் காரணமாகும். தீவிரமான கதாபாத்திரங்களுக்காகப் புகழ்பெற்ற நானா படேகரால் நகைச்சுவையையும் சிறப்பாக வெளிப்படுத்த முடியும் என்பதை இத்திரைப்படம் தெளிவுபடுத்தியது. இதன் மூலம் அவரது நடிப்புத் திறனின் பரந்த வீச்சு குறித்தும் திரைப்பட விமர்சகர்களின் கவனம் திரும்பியது.
நடிப்புக்கு அப்பால், நானா படேகர் திரைப்பட இயக்கத்திலும் ஈடுபட்டார். அவர் திரைக்கதை எழுதி இயக்கிய பிரஹார் (Prahaar) திரைப்படம் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். இத்திரைப்படத்தின் மூலம் சினிமா குறித்த தனது தனித்துவமான பார்வையை அவர் முன்வைத்தார். மேலும், இத்திரைப்படத்தின் கதை, சிறந்த திரைக்கதைக்கான பிலிம்பேர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
நானா படேகரின் வெற்றிக்கான முக்கியக் காரணமாகக் கருதப்படுவது, புகழைத் தேடி ஓடுவதை விடக் கதாபாத்திரத்தின் தரத்துக்கு அவர் முன்னுரிமை அளித்தமையாகும். அதேவேளை, அவரது நடிப்பில் காணப்படும் எளிமை, இயல்புத்தன்மை மற்றும் உணர்வுபூர்வமான வெளிப்பாடு ஆகியவை இளம் தலைமுறை நடிகர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றன.
ராஜு பன் கயா ஜென்டில்மேன் (Raju Ban Gaya Gentleman, 1992) மற்றும் அங்கார் (Angaar, 1992) ஆகிய திரைப்படங்களுக்காகச் சிறந்த எதிர்மறைக் கதாபாத்திர நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளைப் பெற்றார். அதேபோன்று, திரங்கா (Tirangaa, 1993) மற்றும் கிராந்திவீர் (Krantiveer, 1994) ஆகிய திரைப்படங்களுக்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பிலிம்பேர் விருதையும் வென்று சாதனை படைத்தார்.
2000களிலும் தனது நடிப்புத் திறனை மேலும் செம்மைப்படுத்திய படேகர், சக்தி (Shakti, 2002) மற்றும் அப் தக் சப்பன் (Ab Tak Chhappan, 2004) ஆகிய திரைப்படங்களின் மூலம் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து, அபஹரண் (Apaharan, 2005) திரைப்படத்திற்காகச் சிறந்த எதிர்மறைக் கதாபாத்திர நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் மீண்டும் வென்றார்.
2006ஆம் ஆண்டு டாக்ஸி நம்பர் 9211 (Taxi No. 9211) என்ற வணிகத் திரைப்படத்தின் மூலமும் பெரும் வெற்றியைப் பெற்றார். அதேபோன்று, மராத்தித் திரைப்படமான நட்ஸம்ராட் (Natsamrat) மூலமாகவும் வணிக ரீதியில் வெற்றியடைந்தார்.
பல தசாப்தங்களாகத் திரைப்படத்துறையில் நிலைத்திருந்து, பல்வேறு கதாபாத்திரங்களின் மூலம் பார்வையாளர்களின் நினைவில் நீங்காத இடத்தைப் பெற்ற நானா படேகர், இந்தியத் திரையுலகில் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிய கலைஞராவார். ஒரு பிரபலமான நடிகராக இருப்பதைத் தாண்டி, கதாபாத்திரங்களின் ஊடாக மனித வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களைப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதே அவரது தனிச்சிறப்பாகும்.
அத்துடன், பல்வேறு சமூக சேவைகளிலும் அவர் பங்களிப்புச் செய்துள்ளார். இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆதரவற்ற மக்களுக்கும் உதவ முன்வந்த பல சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.
இவ்வாறு மூன்று தேசிய விருதுகள், நான்கு பிலிம்பேர் விருதுகள், இரண்டு மகாராஷ்டிர மாநில விருதுகள் மற்றும் இரண்டு மராத்தி பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற நானா படேகர், இறுதியாகப் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுச் சிறப்பிக்கப்பட்டார். இந்தியத் திரையுலகின் குணச்சித்திர நடிப்பு வரலாற்றில் அவரது பெயர் நீண்டகாலம் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.
– மாலன் விதானபதிரண
No comments:
Post a Comment